Wednesday, April 13, 2011

அறிவு இயலாமை வன்முறை

விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் - ஜிஎன்.

அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்ற தனது கட்டுரையில் தலைப்பில் கூட அரசியலையே முதன்மைப்படுத்தி இஸ்லாத்தின் ஆன்மீக பலத்தை அரசியல் பலமாக சித்தரிக்க முற்பட்டுள்ளார் நேசக் குமார் என்ற ஒரு இஸ்லாத்திற்கு எதிரான விமர்சகர்.

தனது தகுதிக்கு ஏற்றார்போலதான் சிந்திக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளார் நண்பர் நேசக்குமார்.

சந்திக்கும் தொலைவில் அவர் (போன்றோர்) இருந்தால் கலந்துரையாடலுக்கோ, நேர்கானலுக்கோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதற்கு வழியில்லை என்றே நினைக்கிறேன்.

இஸ்லாம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமல்ல - 'அரசியலிலிருந்து மதத்தை பிரித்து விடுங்கள்' என்று சொல்லி மதத்தை ஊனப்படுத்துவதையோ, அரசியல் ரவுடித்தனங்களை கண்டுக் கொள்ளாமல் மதம் ஒதுங்கி நின்று "மறைமுக ஆசிர்வாதம்" செய்து மகிழ்வதையோ இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது.

இஸ்லாத்தின் ஆன்மீக பலம் நூறு சதவிகிதம் என்றால் அது வழிகாட்டும் அரசியல் பலம் என்பதும் வலுவானதாகத்தான் இருக்கும்.

அரசியலை சொல்லாத எந்த ஆன்மீகமும் ஆட்சியாளர்களை, அதிகாரம் பெற்றவர்களை 'வல்லாதிக்க'த்தின் பக்கமே இழுத்து சென்றுக் கொண்டிருக்கும். அரசியலை சொல்லாத ஆன்மீக மதங்களை ஏற்றவர்கள் ஆட்சிப் புரியும் நாடுகளின் 'ஆட்சியாளர்கள் சிலரால் தான்' உலகம் அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறதே தவிர நேசக்குமாரன் எடுத்துக்காட்டும் ஆப்கானிஸ்தான் - ஈரான் - ஈராக் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களால் உலகின் அமைதி கெட்டுப்போகவில்லை. ஆதாரங்கள் இல்லாத போதும் அனைவரும் பாடும் பஜனையை நாமும் பாடினால் அது உண்மையாகி விடும் என்று நேசக்குமாரர்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இயலாவிட்டால் குறைந்த பட்சம் தாம் யார் என்பதை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவாவது செய்யட்டும்.

இனி நேசக்குமாரின் வாதங்களை பார்ப்போம்.

அரசியல் இஸ்லாம்ஆன்மீக இஸ்லாத்தின் அடித்தளம் உருவமிலா ஏக இறைக் கொள்கை என்றால், அரசியல் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிவழிபாடு. இந்த அரசியல் இஸ்லாத்தை நபிகளார் முன்மொழிந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று அந்தக் கால கிறித்துவர்களும், யூதர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களிலிருந்து, இன்று கூறப்படும் அச்சூழலுக்கேயான நிர்ப்பந்தங்கள் என்பது வரை ஏகப் பட்ட காரணங்கள் இதன் தோற்றுவாய் என அறிஞர்களால் இன்றளவும் விவாதிக்கப் பட்டுவருகின்றன. **நேசக்குமார்

  • உருவமில்லா இறைக் கொள்கை என்று இஸ்லாத்தில் எந்தக் கொள்கையும் இல்லை. கடவுளை யாரும் நேரில் காணாததால் அவன் உருவத்தை யாரும் கற்பனை செய்யாதீர்கள் என்பதுதான் இஸ்லாம் முன் வைக்கும் வாதம். உருவமற்ற சூனியத்தை எந்த முஸ்லிமும் வணங்கவில்லை. இறைவன் அவனுக்கே உரிய தன்மைகளுடனும் - உருவத்துடனும் இருக்கத்தான் செய்கிறான் அவனது உருவம் மனித சிந்தனைக்கோ - கற்பனைக்கோ உட்படாதது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. (மனித சிந்தனை வடிவமைத்துள்ள கடவுளைப் பாருங்கள். அந்த கற்பனைகளில் கடவுள் எத்துனை கேவலப்படுத்தப்பட்டுள்ளான் என்பது புரியும்)
  • முஹம்மத் அவர்கள் முன் மொழிந்தது அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று யூதமும் - கிறிஸ்த்துவமும் சொன்னதும் இன்றைக்கும் சொல்வதும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் முஹம்மத் அவர்களோ அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களோ யூதர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (மோசே) கிறிஸ்த்துவர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (இயேசு) ஒருபோதும் குறை சொன்னதே கிடையாது.
  • முஹம்மத் அவர்கள் வருவதற்கு முன் இயேசு முன் மொழிந்த ஆன்மீகத்தைக் கூட அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் சவுல் உட்பட 'இயேசுவின் ஆன்மீக மோசடி' என்றே வர்ணித்தார்கள் என்பதை நேசக்குமார் நினைவுக் கூற வேண்டும்.

**'இஸ்லாமியர்களிடையே கூட முற்போக்கானவர்கள் என தம்மை கருதிக் கொள்வோர், அரசியல் இஸ்லாத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து இப்போதெல்லாம் கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது'**நேசக்குமார்

  • இன்றைக்கு உலகில் நடக்கக் கூடிய அரசியலில் எந்த அரசியலை 'இஸ்லாமிய அரசியல்' என்று இஸ்லாமிய முற்போக்குவாதிகள் கருதுகிறாரகள் என்பதை நேசக்குமார் சற்று புரியும் படி விளக்கட்டும்.

**அரசியல் இஸ்லாம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அரசியல் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாமல் அடிப்படைவாத முஸ்லிம்களின் பேச்சை, செயல்பாட்டை, சிந்தனா முறையை புரிந்து கொள்ள முடியாது.அரசியல் இஸ்லாத்தின் நம்பிக்கைகள்இந்த அரசியல் இஸ்லாம் ஒப்புக் கொள்ளும் 'உண்மையான முஸ்லிம்கள்' கீழ்க்கண்ட நம்பிக்கைகளை உடையவர்கள்:

1. அல்லாஹ் எனும் ஏக இறைவனை மட்டுமே உலகம் முழுக்க உள்ளோர் வணங்க வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், 'அல்லாஹ்' என்ற அரபிப் பெயரில் - திருக்குரான் மற்றும் ஹதீதுகள் வர்ணிக்கும் குணாதிசயங்களுடன் மட்டுமே இக்கடவுளை வணங்க வேண்டும். கடவுள் என்றோ, பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம் போன்ற பெயர்களில் கூட இந்த ஏக இறைவனை வணங்கக் கூடாது. இந்த கடவுளுக்கு திருக்குரான் கற்பிக்கும் குணங்களையே வரித்து வணங்க வேண்டும். இந்த அல்லாஹ்வை கருணையுள்ள ஒரு கடவுளாகவோ(கிறிஸ்துவர்களைப் போன்று), தாயுணர்வு நிரம்பிய ஒரு அன்புத் தெய்வமாகவோ(இந்துக்களைப் போன்று), விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாகவோ (இந்துக்களில் ஒரு பகுதியினர் கருதுவது போன்று) இம்மாதிரி, தமக்கு பிடித்த, வேண்டுகிற குணாதிசயங்களோடு உள்ள கடவுளாக உருவகப் படுத்தி வணங்கக் கூடாது.(திருக்குரான், இந்த 'அல்லாஹ்' வை ஒரு பொறாமை குணம் கொண்ட, கடுமையான ஆணாதிக்க அரபிக் கடவுளாக உருவகம் செய்கிறது). கவனித்துப் பார்த்தால், இதை மூடி மறைத்து அழகிய வாதங்களுடன், தர்க்க நியாயங்களுடன் இஸ்லாமிஸ்டுகள் நியாயப் படுத்துவார்கள்.**நேசக்குமார்

  • இந்த வாதங்கள் நேசக்குமாரனின் இயலாமையா.. அல்லது வன்முறைக்கு வித்திடும் முதல் படியா என்பதை புரிந்துக் கொள் சற்று கடினமாகத்தான் இருக்கின்றது.
  • 'மொழி என்பதும் அதன் வார்த்தைகள் என்பதும் ஒன்றைப் புரிந்துக் கொள்வதற்காக உதவிடும் ஒரு கருவியாகும்' தமிழ் என்பது எப்படி ஒரு மொழியோ அதேபோன்றுதான் அரபும். 'இலாஹ்' என்பதும் 'அல்லாஹ்" என்பதும் அந்த மொழியில் ஒரு பரம்பொருளை சுட்டும் வார்த்தைகளாகும். முஹம்மத் அந்த மண்ணில் தனது பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன் அந்த மக்களிடம் இருந்த ஆன்மீக நம்பிக்கையும் அந்த நம்பிக்கைக்காக அந்த மக்கள் வெளிப்படுத்திய வார்த்தையும் அல்லாஹ் என்றே இருந்தது.
  • முஹம்மத் வந்து இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தவில்லை. அரபு மொழி பேசக் கூடிய யூத - கிறிஸ்த்துவர்கள் கூட அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையே பயனடுத்தி வருகிறார்கள். தமிழக கிறிஸ்த்துவர்களுக்கு வேண்டுமானால் 'அல்லாஹ்' என்ற வார்த்தை முஸ்லிம்களின் வார்த்தையாகத் தெரியலாம். அரபு நாட்டு கிறிஸ்த்தவர்களுக்கு முஹம்மத் அவர்கள் வருவதற்க முன்பே அது மிக பரச்சயப்பட்ட வார்த்தையாகும்.
  • முஸ்லிம்கள், நேசக்குமார் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளால் அல்லாஹ்வை குறிப்பிடுவதில்லை காரணம் என்ன?
  • பெற்றெடுத்தவள் தாய், தாய் என்ற அந்தஸ்த்தை உலகில் ஒருவளுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும். அவளை தாய் என்றோ, ஆத்தாள் என்றோ, அம்மா என்றோ அவளது கண்ணியம் குறையாத எந்த வார்த்தையாளும் குறிப்பிடலாம். ஆனால் பெற்றத்தாயை யாரும் மகள் என்றோ, சின்னாத்தாள் என்றோ, சகோதரி மனைவி என்றோ குறிப்பிட முடியுமா..? மகள், சகோதரி, சிறிய தாய் மனைவி போன்ற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகளிலிருந்து பெறப்படும் பொருள் பெற்றத் தாயுடன் பொருந்திப்போகக் கூடியதல்ல. அந்த வார்த்தைகள் சுட்டும் தன்மைகள் பெற்றத்தாயின் தன்மைகளை ஒத்திருக்கக் கூடியவையல்ல.
  • இப்போது சிந்திப்போம்.
  • மாற்றுக் கொள்கையுள்ள மதத்தவர்கள் 'பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம்" என்றெல்லாம் கடவுளை குறிப்பிடுகிறார்கள் என்று மேலோட்டமாக பூசி மொழுகாமல் அந்த வார்த்தைகளிலிருந்து கடவுள் குறித்து அவர்கள் விளங்கியுள்ள பொருளும் அதன் தன்மைகளும் என்ன என்பதை பார்க்கும் போது அவர்கள் கடவுளாக விளங்கியுள்ள அந்த சிந்தனை வெளிப்பாடுகள் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அந்த சக்திக்கு எந்த விதத்திலும் பொருந்திப் போகக் கூடியவையாக இருக்கவேயில்லை. (இதுபற்றி இறைவனும் அவன் தன்மைகளும் என்ற கட்டுரையில் நாம் விரிவாக விளக்கியுள்ளோம்) இறைவனுக்கு எந்தத் தகுதிகளெல்லாம் இருக்கக் கூடாதோ அந்தத் தகுதிகளுடன் அந்தத் தகுதியை குறிக்கும் பெயர்களுடன் பிறர் இறைவனை கற்பனை செய்துக் கொள்வதையே முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டுமாம். முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள அந்த இறைவனிடம் கருணையுள்ளம் இல்லையாம். (இயேசுவுக்கு (அதாவது இயேசுவாக கருதப்படுபவருக்கு) ஓட்டு) முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட இறைவனிடத்தில் தாயன்பு இல்லையாம் (தாயாக சித்தரிக்கப்படும் பல சிலைகளுக்கு ஓட்டு) இப்படியெல்லாம் சிந்தனைப்பூர்வமாக? ஆராய்ச்சிப்பூர்வமாக? எழுதிக் கொண்டே போகிறார் நேசக்குமார்.
  • பெண் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயின்றுவிட்டு தாயையும் தாரத்தையும் ஒரே இயல்புடன் பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை. இவளும் பெண்தான் அவளும் பெண்தான் என்று தாரத்திடம் கிடைக்க வேண்டியதை தாயிடம் எதிர்பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை.
  • பெண் என்றாலும் தாயும் தாரமும் வெவ்வேறானவர்கள் என் தேவைக்காக நான் இருவரையும் சம கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு என்று ஒருவேளை நேசக்குமாரன் சிந்தித்தால் 'நீ பிற்போக்கான சிந்தனையில் மூழ்குகிறாய்' என்று அவரது உள் மனம் அவரை கிண்டல் செய்தாலும் செய்யும்.
  • இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன்மைகளும் திருக்குர்ஆனில் ஆயிரக்கணக்கான வசனங்களில் சொல்லப்படிருந்தும் - திருக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களிலேயே இறைவன் அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோன் என்று அவனது கருணையும் - இரக்கமும் வெளிப்பட்டிருந்தும் நேசக்குமார் அந்த இறைவனை பொறாமைக் காரனாகவும், ஆணாதிக்க வெறிபிடித்தவனாகவும் சித்தரிக்கிறார் என்றால் சர்ச்சை நாயகனாக தன்னை சித்தரித்துக் கொள்வதற்கே அவர் கீ போர்டில் கை வைக்கிறார் என்பது புலப்படுகிறது.
  • அல்லாஹ்வை விட அவனது தூதரான முஹம்மத் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா... அரசியல் இஸ்லாம் என்று நேசக்குமாரர் எழுதியுள்ள வாதங்கள் என்ன.. தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger